நான் என் வண்டியில் சென்று கொண்டு இருந்தேன். ஒரு தெருவில் நுழையும் போது அந்த தெருவே வெறிச்சோடி இருந்தது. விழாக்கால தாக்கமாக இருக்கும்.
ஒரு சிறுவன் மட்டும் மிதிவண்டியில் எனக்கு முன் தூரமாக சென்று கொண்டு இருந்தான். என் வேகத்தால் நான் அவனை கடந்து சென்ற போது, அவன் என்னை ஒரு பார்வை பார்த்தான்.
அவன் பார்வை எனக்கு புரிந்ததால், மெல்லிய புன்னகையோடு அவனை கடந்து சென்றேன். ஆனால் அவன் விடவில்லை. என்னை போட்டியாக்கி, என்னை முந்தி செல்ல வேகமெடுத்தான்.
நான் மிக மெதுவாக தான் சென்று கொண்டு இருந்தேன். ஒரு முறை அவன் என்னை முந்தி சென்றான். வேர்க்க விறுவிறுக்க அவன் சட்டை முழுதும் வியர்வையால் நனைந்திருக்க, என்னை முந்திய பின்…
என்னை திரும்பி ஒரு பார்வை பார்த்து, ஒரு சிரிப்பு!
அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என்பது புரிந்தது.
மீண்டும் அவனை நான் முந்தினேன். இயல்பாக…
அவன் முகம் வாடியது. பரபரப்பனான். வேகம் கூட்டினான்.
நானாக வேகம் குறைத்தேன். அவன் சந்தோசம் காண…
ஆனால் அவனும் வேகம் குறைத்தான். அவனுக்கு அது புரிந்திருந்தது.
அவனின் சுய மரியாதையும், தன்னம்பிக்கையும் மெய்சிலிர்க்க வைத்தது!
நான் வேகம் எடுத்தேன். அவனும்…
உண்மையான போட்டி தொடங்கியது!
ஆனால், திடீர் என்று சாலை நெருக்கடி. நான் மாட்டி கொண்டேன்.
அவனுக்கு வழி கிடைத்தது. முன்னேறி சென்றான்.
எனக்கு முன் அவன் இலக்கை அடைந்தான்.
அவன் முகத்தில் இருந்த ஆனந்தமும், நம்பிக்கையும், பெருமையும்…
வார்த்தைகள் இல்லை…
வண்டியை, சைக்கிள் முந்த முடியுமா என்று அவன் ஒரு கணமும் யோசிக்கவில்லை…
விட்டு கொடுத்ததையும் அவன் ஏற்க வில்லை…
உறுதிகொண்டான். இயற்கையே அவனுக்கு உறுதுணையானது!
என்னை வெற்றி கொண்டான்.
இன்று அவனே என் குருவானான்!
நான் தோற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
உறுதி கொண்டால், எதையும் அடையலாம்…
என்பது அவன் காலம் முழுதும் அவன் மனதில் நிலைத்திருக்கும்.
இப்படி ஒரு நன்மை நிகழும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் தோற்கலாம்!
உறுதி கொண்டால்…
இமயமும் அடைய கூடியது தான்!